you are

நீங்க இங்க வந்த தமிழ் மனிதன் hit counters

.

சங்க காலத் தமிழ் இப்படி ஆயிருச்சேன்னு யாரும் வருத்தப்படாதீங்க.

வியாழன், 10 செப்டம்பர், 2009

be in one place (oridam Iru)

be in one place.
Be loyal to you yourself. It may help in your own life when the time comes.

ஓரிடம் இரு

டேய் கருப்பையா மாட்டு வண்டியை எடுத்துக்கிட்டு மேட்டுப்பட்டி போய் அந்தக் கரகாட்டம் ஆடுற சொர்னாவைக் கூட்டிக்கிட்டு வாடா. என்றார் வேலுசாமி மீசையைத் தடவி விட்டுக்கொண்டே.


எதிரே உட்கார்ந்திருந்த எனக்கு தூக்கிப் போட்டது. ஐம்பதைத் தாண்டியும் இந்த ஆசாமி ஏன் இப்படி ஆட்டம் போடுகிறார். என்று நினைத்துக்கொண்டேன். தர்மகர்த்தா என்றால் தர்மத்தை காப்பவர் என்று அர்த்தம் அல்லவா. லேசாய் சிரிப்பு வந்தது.

தம்பி என்ன ஒரு மாதிரி முழிக்கிறீங்க. நானும் வந்ததிலிருந்து பார்த்துகிட்டிருக்கேன். சிகரெட் தான் குடிக்க மாட்டேன் னுட்டீங்க. டிரிங்க்சும் வாங்கி வந்ததைஎல்லாம் நானே குடிச்சாச்சு. இப்ப சொர்னாவைக் கூட்டி வான்னதும் பேய் முழி முழிக்க ஆரம்பிச்சுட்டீங்க. இந்த இருபதும் சொச்சத்திலே ஏன் தம்பி இப்படி சாமியார் மாதிரி இருக்கீங்க. அவர் கட கடவென சிரித்தார்.

நான் வானத்து நிலவையே பார்த்துக் கொண்டிருந்தேன், அருகம்புல் ஓரத்தில் ஒட்டிக் கொண்ட பனித்துளியை க்ளோஸ் அப்பில் காட்டுவது மாதிரி அந்த நிலா தென்னை ஓலையின் ஒரு கீற்றில் ஓரத்தில் ஒட்டிக் கொண்டிருந்தது. மணி எட்டு இருக்குமோ. நேற்றோ இன்றோ பௌர்ணமியாய் இருக்க வேண்டும். வயல் காற்று உர வாசனையோடு ஜில்லென்று முகத்தில் அடித்தது.





நாங்கள் உட்கார்ந்திருந்த இடம் களத்து மேடு என்கிற கதிர் அடிக்கிற இடம். சுற்றிலும் வயல். கீழண்டைப்புரத்தில் ஒரு பெரிய கேணி. கேணியை ஒட்டி இரண்டு ரூம் கட்டி அதில் ஒன்றில் மோட்டார் இருந்தது. வயல் தர்மகர்த்தாவுடையதுதான். ஏன் ஊரே அவருடையதுதான்.


நான் தொல்பொருள் ஆராய்ச்சியாளன். இங்கே கிராமத்துக் கோயிலில் பழைய கல் வெட்டுக்கள் இருப்பதாய் கேள்விப் பட்டு சென்னையிலிருந்து வந்திருக்கிறேன். எனக்கு தர்மகர்த்தா கொடுக்கும் அன்பான உபசரிப்புத்தான் சிகரெட் இத்யாதிகள்.

ஒரு வேலை நான் சாமியார் மாதிரிதான் இருக்கிறேனோ. கல்லூரி நாட்களிலேயே எனக்கு புத்தகப்புழு என்றுதான் பேர். இப்போதும்கூட கையில் விவேகானந்தரோ ராமகிருஷ்ணரோ தான் இருக்கும். அப்படி ஏதும் இல்லா விட்டாலும் கூட நிலவுதான் என் நண்பன். நல்லவன். மௌனமானவன். எல்லாக் காரியங்களுக்கும் ஒரு காரணம் இருக்கும் என்று சொல்கிறதே கீதை , இதற்கும் ஏதேனும் காரணம் இருக்கும்.

தூரத்தில் வில்வண்டி வருவது நிலவொளியில் லேசாய்த் தெரிந்தது.

தம்பி, இருபது முப்பது வருசமாய் இது பழகிப்போச்சு தம்பி. சுற்று வட்டார கிராமங்களிலிருந்து எனக்கு எப்போதும் கூட்டிக்கிட்டு வருகிறவன் கருப்பையாதான். சின்ன வயசிலே அப்பா இருந்த காலத்திலே சினிமாவுக்குப் போறதாச் சொல்லிட்டு இப்படி எங்கேயாச்சும் போய் விடுவேன். அப்பா காலமானதற்கு பிறகு நானே பெரிய தலைக்கட்டாய் ஆனதற்கு அப்புறம் இருந்த பயமும் போச்சு. எல்லாம் இந்த வயல் வீட்டிலேதான். அவர் மீண்டும் சிரித்தார்.

அந்த சிரிப்பு எனக்கு பிடிக்க வில்லை. பிரம்மச்சரியத்துக்கும் சாமியாருக்கும் வித்தியாசம் தெரியாத இந்த ஆசாமியை என்ன செய்வது. இவர் என் இந்த வயசில் இப்படி இருக்கிறார். தான் செய்வது தவறு என்று இவருக்கு தோன்றாதோ. எதிரில் ஒரு இருபது வயது பையன் இவை எதுவும் தேவை இல்லை என்று உட்கார்ந்திருக்கிறானே நம்மால் முடியவில்லையே என்று அவமானமாய் இருக்காதோ.

வில்வண்டி களத்தில் வந்து நின்றது. பின்பக்கமாய் ஒரு பெண் இறங்கினாள். பக்கத்தில் வந்ததும் வேலுச்சாமியை பார்த்து ஒரு பழகிய சிரிப்பையும் என்னைப் பார்த்து ஒரு அறிமுகச்சிரிப்பையும் உதிர்த்தாள். நான் என் கால்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். தம்பி ரொம்ப வெட்கப் படுது என்றாள்.


வேலுச்சாமி வயல் பக்கமாய் எழுந்து போனார்.

வண்டியிலே வரும்போதே கருப்பையா சொல்லிச்சு. சார் ரொம்ப சின்னப் பையனாய் இருக்கார்னு. ஆசையாய் வந்தால் நீ இப்படி இருக்கியே. என்றாள்.

எனக்கு ஏனோ எச்சில் இலை ஞாபகம் வந்தது. உடம்பெல்லாம் கம்பளி பூச்சி ஓடியது.

நிலவு இப்போது தென்னை ஓலையை விட்டு விட்டு அந்தரத்தில் தொங்கி கொண்டிருந்தது.

எனக்கு வேண்டாம். என்று சொல்லி விட்டு சேரில் சாய்ந்தவாறு கண்களை மூடிக் கொண்டேன்.

கண் திறந்து பார்த்தபோது நிலவு உச்சியில் இருந்தது. அவள் இல்லை. வேலுச்சாமியும் இல்லை. கருப்பையா வில்வண்டி பக்கத்திலேயே வைக்கோல் பரப்பித் தூங்கிகொண்டிருந்தான்.

உச்சி நிலவு போல் மனமும் தெளிவாய் இருந்தது. தூங்கிப் போனேன்,

சுளீர் என்று வெயில் அடித்து எழுந்தபோது வேலுச்சாமி எதிரில் உட்கார்ந்திருந்தார். குளித்து சுத்தமாய் வீபூதீ அடித்திருந்தார். நேற்றுப் பார்த்த வேலுச்சாமியா இவர். வில்வண்டியையும் கருப்பையாவையும் காணோம்.

தம்பி, மோட்டார் ஓடுது. போய் குளிச்சுட்டு வாங்க. வீட்டில் போய் சாப்பிட்டுட்டு அப்படியே கோவிலுக்கும் போயிட்டு வரலாம்.

வீடு பெரிய வீடாய் கல் வீடாய் இருந்தது. எட்டு சுற்றுக்கட்டு வைத்து கட்டிய வீடு. இட்லியைச் சாப்பிடும்போது முற்றத்து வெயில் இரண்டு முறை இலையைத் தொட்டபோது நகர்த்திக் கொண்டேன். சூரியனுக்கும் பசிக்குமோ. வெயிலுக்காக நான் இலையை இழுப்பதை பார்த்து அந்த அம்மாள் லக்ச்மிகரமாய் சிரித்தார்கள். முகம் தெளிவாய் இருந்தது. தன் கணவரைப்பற்றி ஒன்றுமே தெரியாதோ இவர்களுக்கு. அல்லது எல்லாம் தெரிந்தும் தலைக்கு மேலே போய் விட்டது என்ற நிலையில் உள்ள அமைதியோ.

கல்யாணி வெயில் வராம இலையை வடக்குத் திண்ணையில் போட்டிருக்கலாமில்லே என்றார், வீடு அமைதியாய் இருப்பதைப் பார்த்து பிள்ளைகள் எங்கே என்றேன். அம்மா வேகமாய் உள்ளே போனதில் கோபம் தெரிந்தது.

என் கண்களை பார்க்க முடியாமல் வேலுச்சாமி தலை குனிந்து கொண்டு "அதுதான் ஆத்தா இன்னும் தல்லே" என்றார். நான் கேட்டிருக்கக் கூடாதோ. தராத காரணம் இவருக்குத் தெரியாதா என்ன?

கோவிலுக்கு நடந்தோம். பருத்திக்காட்டுக்கு நடுவே சின்னக் கோவிலாய் இருந்தது. சுற்று மண்டபத்தில் ஆல் அரசு வேம்பு என ஒரே காடாய் இருந்தது. கதவு இல்லை. உள்ளே காளி ஒன்று கையில் உள்ள சூலத்தால் கீழே விழுந்து கிடக்கும் ராஜாவைக் கொல்வதுபோல் உக்கிரமாய் நின்று கொண்டிருந்தது. சுற்றுச் சுவர் பூராய் ஒரே கல் வெட்டாய் இருந்தது. பல்லவர் கால கோயிலாய் இருக்கலாம் .

ஆத்தா பேரே கொல்லும் காளிதாங்க என்றார்.




இவையெல்லாம் வாழ்ந்த தெய்வங்களாய் இருக்கும். அரசனோ பிறரோ மிகவும் முறை கேடாய் ஒழுக்கம் கெட்டுப் போகும்போது ஒரு பெண் கோபம் கொண்டு கொலையும் செய்திருக்கலாம். அந்த முயற்சியில் அவள் இறந்தும் போயிருக்கலாம். ஊரார் அவளை வணங்கும் போது அவள் நாளடைவில் தெய்வமாகிறாள். மணப்பாறையில் இதே போல் ஒரு காளி இருக்கிறது. அது தன் மடியில் ஒரு அரசனைப் போட்டு வயற்றைக் கிழித்து குடலைத் தின்பதுபோல் உட்கார்ந்திருக்கிறது. அதன் அருகே ஒரு பெண் ஒரு கைக் குழந்தையோடு நிற்கிறாள். கற்ச்சிர்ப்பம் இல்லை சுதை வேலை. நான் அந்தக் கோயிலுக்கு போனபோது அப்போதுதான் கும்பாபிசேகம் பண்ணி பெயிண்ட் எல்லாம் அடித்து வைத்திருந்ததால் குடல் வாயெல்லாம் ஒரே சிகப்பாய் தத்ரூபமாய் இருந்தும் தூக்கி வாரிப் போட்டது. அங்கே உள்ளவர்களுக்கு அதன் வரலாறோ அந்தக் குழந்தையும் தாயும் என்ன என்றோ சொல்லத் தெரியவில்லை. அதுவும் ஏதேனும் வாழ்ந்த தெய்வம்தான் என்றேன்.

தம்பி நான் சின்னப் பிள்ளையிலேர்ந்து இந்தக் கோயிலுக்கு வந்துகிட்டு இருக்கேன், இப்ப நீங்க வந்து வயத்தைக் கலக்குறீங்களே. என்றார்.

நீங்கள் பயப்படவேண்டியவர் தான் என நினைத்துக் கொண்டேன்.

அந்தக் கோயிலில் பத்து நாள் வேலை இருந்தது. போட்டோக்கள் எடுத்து, கல் வெட்டுக்களை படிவம் எடுத்து குறிப்பெழுதி பத்து நாள் போனது. நடுவில் ஒருநாள் முன் மண்டபத்தில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம்.

லேசாய் மழை தூறிக் கொண்டிருந்தது.

ஐயா வயல்ல பாத்தி கட்டி விதை நெல்லு போடுறோம். ஆனா சமயத்துலே மழை பெஞ்சு விதையைப் பூரா பக்கத்து வயல் வரப்பு காடு கரைன்னு அடிச்சுட்டுப் போயிரும் . ஒரு பத்து நாள் கழிச்சு பாத்தா அம்புட்டு நெல்லும் அங்கங்கே முளைச்சிருக்கும். ஆனா அதையெல்லாம் நம்ம நெல்லுன்னு உரிமை கொண்டாட முடியாது. நம்ப வயல்ல விளைஞ்சல்தான் நம்ம நெல்லுன்கிற உரிமை நமக்கு வரும். இதை நீங்க புரிஞ்சுக்கிட்டிங்கன்னா சரி. என்றேன்.

வேலுச்சாமியின் நெற்றியில் சுருக்கங்கள் விழுந்தது. தம்பி நீங்க பூடகமா என்ன சொல்றீங்கன்னு எனக்குப்புரியுது. நிச்சயமா ஒரு வழி ஆத்தா காண்பிப்பாள் . என்றார் சன்னதியைப் பார்த்துக்கொண்டே.

அப்புறம் மெட்ராஸ் வந்து ரிப்போர்ட் கொடுத்து விட்டு ஆபீஸ், பல்லவன், வீடு என அலைந்து கொண்டிருந்ததில் இரண்டு வருடம் வயலூரையும் மேட்டுப்பட்டியையும் வேலுச்சாமியையும் மறந்தே விட்டேன்.

ஒரு நாள் ஆபீஸில் வழக்கமான அரசாங்கக் காக்கிக் கவர்களுக்கு நடுவே பெரியதாய் ஒரு வெள்ளைக் கவரும் இருந்தது. கவரின் மேல் வளைகாப்பு சீமந்தப் பத்திரிக்கை என பிரிண்ட். பத்திரிகையோடு ஒரு சின்னக் கடிதமும் எட்டிப் பார்த்தது.

"தம்பி வயசுல சின்னப் புள்ளையான நீங்க முப்பது வருடமாய் இருட்டுல இருந்த என்னை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தீங்க. எங்க ஊர்க்காளி கொல்ல நினைக்கிறது என்னைப் போன்றவர்களோட தீய பழக்கங்களைத்தான்னு சொல்லாம சொன்னீங்க. முப்பது வருசமா விவசாயம் பண்ணிக்கிட்டு இருக்கிற எனக்கே என் வயல்ல விளைஞ்சால்தான் எனக்குச் சொந்தங்கிற உண்மையைப் புரிய வச்சீங்க.

இப்போ என் வீட்டு வயல்லே விளைஞ்சிருக்குங்கிற சந்தோசத்திலே உங்களுக்கு பத்திரிகை அனுப்பி இருக்கிறேன். வளைகாப்புக்கு அவசியம் வரவேணும்" என்றது.

சிரித்துக் கொண்டேன்.

என்ன விசேசம் என்றான் பக்கத்து சீட் நண்பன்.

இதுவரைக்கும் நம்ப டிபார்ட்மெண்டிலே கல்லுக்கும் மண்ணுக்கும் தானே ட்ரீட்மென்ட் கொடுத்துக்கொண்டு இருந்தோம். இப்போ ஒரு மனித மனதுக்கு ட்ரீட்மென்ட் கொடுத்தேன், அதுதான் இந்த பத்திரிக்கை. என்றேன்.

இவன் எப்பவும் இப்படித்தான்யா ஏதாவது நிலா சூரியன் மனிதன் மனசு ன்னு உளறிக் கொண்டிருப்பான் என்றார் எதிர் சீட்டு ஆபிசர்.

*************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக